கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 14-வது போப் லியோவுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அவர் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போப் லியோவின் நுரையீரலில் சிறிய முடிச்சு இருப்பது வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதாகவும், அதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, போப் லியோவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
Advertisement
ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நுரையீரலில் இருந்த புற்றுநோய்க் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், போப் லியோவுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் விரைவில் முழுமையாகக் குணமடைந்து, சிறந்த உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.