தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக நீண்டகாலக் கடன்களை வழங்குவதற்காகச் சிறப்பு முகாம்களை நடத்த கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபடுவோர் கடன் பெற்று பயன்பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை அடைவதற்காக, வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்களும் கடன் மேளாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சிங்கப்பெண்கள் கடன் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான முகாம்கள் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் பிற முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் திட்டங்கள் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதனுடன், கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.50 கோடி மதிப்பிலான நீண்டகாலக் கடன்களும் வழங்கப்படவுள்ளன. வேளாண் இயந்திரமயமாக்கல், குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல், கறவை மாடு, ஆடு மற்றும் கோழி வளர்ப்பு, அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தக் கடன்களைப் பெறலாம்.
Advertisement
தகுதியுள்ள உறுப்பினர்கள் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை நீண்டகாலக் கடன் பெற முடியும். இதற்காக, தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை (PCARDB) அணுகி, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, கேஒய்சி ஆவணங்கள் மற்றும் நில அடமானம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கடன் வசதியைப் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடையுமாறு பொதுமக்களுக்குக் கூட்டுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கடன் திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.