சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 84 குடிநீர் விநியோக நிலையங்களில் இருந்து பிரதான குழாய்கள் மூலம் நாளொன்றுக்கு 120 கோடி லிட்டர் தண்ணீரை விநியோகிக்கத் தனித்தனியாக குழாய்கள் அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் விஜய் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சுற்றுக்குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய், அப்பகுதியில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஐடி ஊழியர்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். சோழிங்கநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதி ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இங்கு இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்த கட்டடத்திற்கு எதிரே அமைந்துள்ள இன்போசிஸ் நிறுவனத்திலும் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில், முதல்வர் விஜய் அப்பகுதிக்கு வருகை தருவதை அறிந்த ஐடி நிறுவன ஊழியர்கள், தாங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த இடங்களில் இருந்து வெளியே வந்து அவரைக் காணத் திரண்டனர். நிறுவன அடையாள அட்டைகளுடன் நின்றிருந்த அவர்கள், முதல்வரைக் கண்டதும் உற்சாகமாகக் கையசைத்து தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர். சோழிங்கநல்லூர் பகுதியில் ஐடி ஊழியர்கள் அதிகளவில் இருப்பது குறித்து அமைச்சர்கள் முதல்வரிடம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அங்கு திரண்டிருந்த இளைஞர்களைச் சந்திக்கும் வகையில் முதல்வர் விஜய் வழக்கத்தைவிட நீண்ட தூரம் நடந்து சென்றார். பொதுவாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது மக்களை நேரில் சந்திப்பதற்காக நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள முதல்வர் விஜய், இந்த முறை ஐடி ஊழியர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் கூடுதல் தூரம் நடந்து சென்று அவர்களது வரவேற்பைப் பெற்றார்.