டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் இருவரும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராகவும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், காந்தி ஜெயந்தியன்று ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து, போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்தன. அண்மையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டது. இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், தேசியச் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகியோர் நேற்று காலை ஜந்தர் மந்தருக்கு வந்தனர். அப்போது, அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்.
Advertisement
இருப்பினும், அவர்களுடன் வந்த 10-க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடிகளை ஏந்தியபடி, பூட்டப்பட்டிருந்த நுழைவாயில் கதவுகள் மீது ஏறி மறுபுறம் சென்றனர். இதையடுத்து, தடையை மீறி நுழைந்ததாக சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா உள்ளிட்ட அனைவரையும் டெல்லி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இரு நிர்வாகிகளையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து வழக்கறிஞர் அபிஷ்த் ஹேலா கூறுகையில், குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்த ஊகத்தின் அடிப்படையிலேயே இருவரும் 5 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார். மேலும், மக்கள் திரண்டு வர வேண்டும் என இருவரும் அழைப்பு விடுத்ததாக நீதிமன்றத்தில் போலீசார் தவறான தகவலைத் தெரிவித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். அத்தகைய அழைப்பை அவர்கள் விடுக்கவில்லை என்றும், ஒப்பந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் அவர் கூறினார். மற்றொரு பகுதி தொடர்பான புகார், இந்த விவகாரத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் அபிஷ்த் ஹேலா தெரிவித்தார். இதற்கிடையே, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.