பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: ஆகஸ்ட் 28 முதல் துபாயில் போட்டிகள்
பெண்களுக்கான 10-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13 வரை துபாயில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தத் தொடரில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் நடப்பு சாம்பியனான இலங்கை, வங்காளதேசம், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன.லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளை தலா ஒரு முறை எதிர்கொள்ளும்.
அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.இதுவரை 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆகஸ்ட் 30 அன்று தாய்லாந்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 3-ஆம் தேதி ஹாங்காங் அணியையும், செப்டம்பர் 5-ஆம் தேதி பாகிஸ்தானையும் சந்திக்க உள்ளது. தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.