பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ‘ராமாயணா’ டிரெய்லர்... ரசிகர்களிடம் அமோக வரவேற்பு
இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள **‘ராமாயணா’** திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று அதிகாலை 4.15 மணியளவில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெளியிடப்பட்டது. பிரமாண்டமான காட்சியமைப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வால்மீகி இயற்றிய ராமாயணக் காவியத்தை மையமாகக் கொண்டு இயக்குநர் நிதேஷ் திவாரி இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் உருவாக்கி வருகிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த திரைப்படத்தின் முதல் பகுதி 2026-ஆம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பகுதி 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இசையை ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதற்கு முன் வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், டிரெய்லருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.இதற்கு முன்பு புதுடெல்லியில் நடைபெற்ற 'பிரதம் சங்கல்ப்' நிகழ்ச்சியிலும், அமெரிக்காவின் சான்டியாகோ காமிக்-கான் விழாவிலும் திரையிடப்பட்ட டிரெய்லரின் சில பகுதிகள் செல்போனில் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் கசிந்தன.
ஒரு முதல் இரண்டு நிமிடங்கள் வரை நீடித்த அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பல மாதங்களாக உழைத்து உருவாக்கப்பட்ட காட்சிகள் இவ்வாறு வெளியானது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கருத்து தெரிவித்தனர்.
இந்த கசிந்த வீடியோக்களின் பரவலைத் தடுக்க படக்குழு உடனடியாக காப்புரிமை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களை அகற்றும் வகையில் 'காப்பிரைட் ஸ்டிரைக்' உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த சூழலில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டது. பிரமாண்டமான விஷுவல் எபெக்ட்ஸ், சக்திவாய்ந்த பின்னணி இசை, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் காட்சிகளின் தரம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது இணையத்தில் டிரெய்லர் வேகமாக வைரலாகி வரும் நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தை எதிர்நோக்கும் ரசிகர்களின் ஆவலும் மேலும் அதிகரித்துள்ளது.