விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சியில் நடிகரும் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், விஜய் தொலைக்காட்சி தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘பிக் பாஸ் 10’ நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் சட்டப்பேரவை அமைப்பை மையமாகக் கொண்டு போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ‘ஜனநாயக அறை’ அமைக்கப்பட்டு, போட்டியாளர்கள் ஆளும் அணி மற்றும் எதிரணியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிரணியினர் சுட்டிக்காட்டும் வகையில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடி, நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களிடமும் காணப்படும் நிறை, குறைகள் குறித்து பேசுவது வழக்கம். அந்த வகையில் தலைமைப் பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி, தலைமைத்துவத்தின் உண்மையான பொறுப்பு என்ன என்பதை அறியாமல் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பின்னர் பிரச்சினைகள் மற்றும் பொறுப்புகள் வந்ததும் எதிரணியினர் மீது பழியை சுமத்தி விலகிச் செல்வது தலைவருக்கான தகுதி அல்ல என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. விஜய் சேதுபதி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசியதாக சிலர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ தரப்பிலும் விஜய் சேதுபதியை விமர்சித்து பதிவுகள் வெளியானதாக கூறப்படுகிறது.
Advertisement
இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் அவருக்கு சட்ட ரீதியாக ஆதரவளிப்போம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விஜய் தொலைக்காட்சி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சி அதன் வழக்கமான வடிவம், கருப்பொருள் மற்றும் விளையாட்டு அமைப்புக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழல்கள், உரையாடல்கள், கருத்துகள் மற்றும் போட்டியாளர்களுக்கு இடையிலான தொடர்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் கதைக்களத்தின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் தொலைக்காட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் வெளிப்படும் எந்தவொரு கருத்தையும் நிகழ்ச்சிக்கு வெளியே இருக்கும் தனிநபர், அமைப்பு, நிறுவனம், கருத்தியல் அல்லது சூழ்நிலையை ஆதரிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ, பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் பொழுதுபோக்கு நோக்கத்திற்கு அப்பால் அதில் இடம்பெறும் கருத்துகளை வேறு வகையில் விளக்குவதோ அல்லது வெளிப்புற நிகழ்வுகளுடன் ஒப்பிடுவதோ நிகழ்ச்சிக் குழுவின் நோக்கம் அல்ல என்றும் விஜய் டிவி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.