‘ஆஹா கல்யாணம்’ வெப் சீரிஸில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரிகிடா, நடிகர் ஆனந்த் ராமை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. நடிகர் விஷால் நடித்த ‘அயோக்யா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரிகிடா, அதன் பின்னர் ‘வர்மா’, ‘மாஸ்டர்’, ‘வேலன்’, ‘இரவின் நிழல்’, ‘கருடன்’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, ‘மார்கன்’, ‘இட்லி கடை’, ‘ஹாட் ஸ்பாட் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் பகல்’ படத்திலும் இவரது நடிப்பு கவனம் பெற்றது. இதனிடையே, ‘மீசைய முறுக்கு’, ‘நண்பன் ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆனந்த் ராமுடன் பிரிகிடா காதல் உறவில் இருந்தார். ஆனந்த் ராமின் பிறந்தநாளில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் தனது காதலை பிரிகிடா வெளிப்படுத்தியிருந்தார்.
Advertisement
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரிகிடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் படங்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டன. இந்நிலையில், பிரிகிடா மற்றும் ஆனந்த் ராம் நேற்று திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்வின் புகைப்படங்களை பிரிகிடா தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தங்களது திருமணம் நடைபெற்றதை தெரிவித்துள்ள அவர், தம்பதிக்கு கிடைத்த வாழ்த்துகள் மற்றும் ஆசிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், பிரிகிடா மற்றும் ஆனந்த் ராமுக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.