பழனி நில மோசடி விவகாரம்: ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாசை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு
பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.பழனியில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலம் 2 பேரின் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.இந்த விசாரணையின் அடிப்படையில் திண்டுக்கல்லை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி, வக்கீல் அன்வர்தீன், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் 6 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதற்கிடையே முருகதாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று (புதன்கிழமை) மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் பாக்யராஜ், பழனி நில மோசடி வழக்கு தொடர்பாக ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரையும் இன்று மாலை 5.30 மணி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.இருவரிடமும் நடைபெறும் விசாரணையில் நில மோசடி தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சிலர் சிக்கக்கூடும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.