பரபரப்பாகும் அரசியல் களம்: இடைத்தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அசாமில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய செயலாளர் சஞ்சீவ் குமார் பிரசாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் தமிழ்நாடு: * தொகுதி எண் 35 — மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி. திருமதி மரகதம் குமரவேல் ராஜினாமா செய்ததால் தொகுதி காலியானது. * தொகுதி எண் 101 — தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி. திருமதி பி. சத்யபாமா ராஜினாமா செய்ததால் தொகுதி காலியானது. புதுச்சேரி: * தொகுதி எண் 09 — தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி. திரு. என். ரங்கசாமி ராஜினாமா செய்ததால் தொகுதி காலியானது. மேற்கு வங்காளம்: * தொகுதி எண் 70 — ரெஜி நகர் சட்டமன்றத் தொகுதி. திரு. ஹுமாயூன் கபீர் ராஜினாமா செய்துள்ளார். * தொகுதி எண் 210 — நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி. திரு. சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்துள்ளார். அசாம்: தொகுதி எண் 09 — நாகோன் நாடாளுமன்றத் தொகுதி. திரு. பிரத்யுத் போர்தோலோய் ராஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறித்து தேர்தல் ஆணையம் சுத்தமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், சுதந்திரமான, நியாயமான மற்றும் நம்பகமான தேர்தலுக்கு முக்கிய அடித்தளமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 14-ல் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் வாக்காளராகப் பதிவு செய்ய நான்கு தகுதி தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டு தேதிகள்: * மதுராந்தகம் — 23.02.2026 * தாராபுரம் — 23.02.2026 * தட்டாஞ்சாவடி — 14.02.2026 * ரெஜி நகர் — 28.02.2026 * நந்திகிராம் — 28.02.2026 * நாகோன் நாடாளுமன்றத் தொகுதி — 10.02.2026 எனினும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில், வேட்புமனு தாக்கல் முடியும் நாள் வரை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகள் தொடரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை தட அமைப்பு (VVPAT) ஆகியவை பயன்படுத்தப்படும். இதற்குத் தேவையான போதுமான எண்ணிக்கையிலான EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், அவற்றின் மூலம் வாக்குப்பதிவை சுமூகமாக நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடியில் ஏற்கப்படும் அடையாள ஆவணங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) முதன்மை அடையாள ஆவணமாக இருக்கும். அதேவேளையில், வாக்காளர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம்: * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அட்டை (MGNREGA Job Card) * வங்கி அல்லது அஞ்சலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம் * தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை / ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை * ஓட்டுநர் உரிமம் * தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை * இந்திய கடவுச்சீட்டு * புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் * மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை * நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் * மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID Card) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் தேர்தல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தொகுதியின் முழுப் பகுதியையோ அல்லது ஒரு பகுதியையோ உள்ளடக்கிய மாவட்டம் அல்லது மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.