நாட்டில் உள்ள சமூகநோய்க்கும் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் திருமாவேலன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது, மனிதர்களின் உடல்நோய்களுக்கு மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதைப் போல, நாட்டில் நிலவும் சமூகநோய்களுக்கும் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.திருமாவேலன் - ரேணுகா திருமாவேலன் தம்பதியின் மகள் டாக்டர் அமிர்தாவுக்கும், டாக்டர் பாலசுப்பிரமணியன் - சுதா பாலசுப்பிரமணியன் தம்பதியின் மகன் டாக்டர் ரவிந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருக்குறள் நெறியைப் பின்பற்றி நடைபெற்ற இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழர்களின் பண்பாடு மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் சுயமரியாதை திருமணங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலை 1967-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததாகக் கூறினார்.1967-ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, இருமொழிக் கொள்கை, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது என முக்கியமான மூன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.அண்ணா கொண்டு வந்த சட்டத்தின் மூலம் சுயமரியாதை திருமணங்கள் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெற்றதாகவும், தற்போது நடைபெற்றுள்ள திருமணமும் அந்த சட்டத்தின் அடிப்படையிலேயே நடந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். இதுபோன்ற திருமணங்களை முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர், இனமான பேராசிரியர் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் ஏராளமான அளவில் நடத்தி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.இல்வாழ்க்கை அன்பையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பதை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், திருமாவேலனின் தந்தை புலவர் படிக்கராமு திருக்குறளைப் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைப் பாராட்டினார்.