தென்னிந்தியாவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வடமாநில பெண்கள் கைது
தென்னிந்திய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும், 'த்ரீ ரோஸ்' என போலீசாரால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்று வடமாநில பெண்களை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மூன்று பெண்கள், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, அவர்கள் அடிக்கடி தங்களது தங்கும் இடங்களை மாற்றி வந்ததால், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச போலீசார் அவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.சமீபத்தில், சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள இரண்டு துணிக்கடைகளில் திருட்டு நடந்ததைத் தொடர்ந்து, மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.அந்தப் புகைப்படங்கள் புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்துமாறு புதுச்சேரி குற்றப்பிரிவு போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், தேடப்பட்டு வந்த மூன்று பெண்களும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார், வாடிக்கையாளர்கள் போல கண்காணித்து, திருட்டுக்கு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் மூவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.பெரியகடை போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில், அவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு (40), மீனாட்சி (35), லட்சுமி (40) என்பது உறுதி செய்யப்பட்டது.மேலும், சென்னையில் தங்கி திருட்டில் ஈடுபட்ட அவர்கள், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை ரெயில் மூலம் மத்திய பிரதேசத்திற்கு அனுப்பி அங்கு பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, டி.ஜி.பி. ஷாலினி சிங்கின் உத்தரவின்படி கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைக்காக சென்னை மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.