Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

திரையரங்குகளில் காலை 6 மணி காட்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு

திரையரங்குகளில் காலை 6 மணி காட்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் காலை 6 மணி முதல் தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ. பரந்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாட்களுக்கு, தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை ஆறு காட்சிகள் திரையிடவும், சனி, ஞாயிறு, உள்ளூர் பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் ஆறு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியும் தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. பொழுது விடிந்ததும் திரையரங்குகளில் புதிய படங்களைத் திரையிட அனுமதிப்பது இளைஞர்களின் எதிர்காலத்தையும், தமிழகத்தின் பண்பாட்டையும் பாதிக்கும் நடவடிக்கையாகும். மாணவர்களின் கல்வி மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சிக்காக நான் முதல்வன், புதுப்புது நூலகங்கள், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முந்தைய திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. ஆனால், தற்போதைய அரசு அதிகாலை 6 மணி முதல் ஒரு நாளைக்கு ஆறு திரைப்படக் காட்சிகளை நடத்த அனுமதித்திருப்பது ஒரு தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர் விமர்சித்துள்ளார். நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யின் 'லியோ' திரைப்படம் வெளியானபோது, காலை 6 மணி காட்சியின்போது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், கண்ணாடி உடைப்பு உள்ளிட்ட சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கில்தான் முந்தைய திமுக அரசு காலை 6 மணி காட்சிக்கும், தினசரி ஆறு காட்சிகளுக்கும் கட்டுப்பாடு விதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது 'லியோ' படக்குழுவினர் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியபோதும், பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியதாகவும், இதன் காரணமாகவே காலை 6 அல்லது 7 மணி காட்சிகளுக்கும், தினமும் ஆறு காட்சிகளுக்கும் அனுமதி வழங்குவதில் திமுக அரசு உறுதியாக மறுத்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஆனால், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு காலை 6 மணி காட்சி மற்றும் தினசரி ஆறு காட்சிகளுக்கு அனுமதி அளித்திருப்பது, கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கை மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவுகளுக்கும் முரணானது என இ. பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ச்சியாக திரைப்படக் காட்சிகள் நடத்தப்படும்போது, ஒரு காட்சி முடிந்து பார்வையாளர்கள் வெளியேறுவதற்கும் அடுத்த காட்சிக்கான ரசிகர்கள் உள்ளே வருவதற்கும் போதிய இடைவெளி கிடைக்காது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிடும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஹைதராபாத்தில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், 2023-ஆம் ஆண்டு சென்னையில் திரைப்பட வெளியீட்டின்போது நள்ளிரவு 1 மணி காட்சியைக் கொண்டாடிய ரசிகர் ஒருவர் லாரி மீது ஏறி நடனமாடியபோது தவறி விழுந்து உயிரிழந்ததையும் நினைவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே முந்தைய அரசின் நோக்கமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது ஆறு காட்சிகளுக்கு அனுமதி அளித்திருப்பது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களில் புதிய படங்கள் காலை 6 மணிக்கே திரையிடப்படுவதால், அங்கிருந்து முன்கூட்டியே திரைப்பட விமர்சனங்கள் வெளியாகி தமிழகத்தில் படங்களின் வெற்றி வாய்ப்பைப் பாதிப்பதாக தமிழ்நாடு நடப்பு சினிமா தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ள கருத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திரைப்படத்தின் வெற்றியை விட மனித உயிர்களே முக்கியம் என்றும், ஹைதராபாத் சம்பவத்துக்குப் பிறகு மற்ற மாநிலங்களிலும் திரைப்படக் காட்சிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். திரைப்படத்தின் வெற்றியைவிட அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையும் எதிர்காலமும் முக்கியம் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என தனது அறிக்கையில் இ. பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு