கேரளாவின் திருவனந்தபுரம் கடற்பகுதியில் ஏற்பட்ட கடும் கடல் சீற்றம் காரணமாக ஒரே நாளில் இரண்டு படகு விபத்துகள் நிகழ்ந்ததில், 4 மீனவர்கள் கடலில் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரம் அருகிலுள்ள முத்துலப்பொழி முகத்துவாரப் பகுதியில், இன்று அதிகாலை மீன்பிடித்துவிட்டு கரை நோக்கி வந்த பைபர் படகு, திடீரென எழுந்த ராட்சத அலையின் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் படகு தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த ஷிஜின் (32), பிரீமோன் (28) ஆகியோர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானனர். அதே நேரத்தில், படகின் உரிமையாளர் ஜோஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் நீந்தி கரையை அடைந்து உயிர் தப்பினர்.இதற்கிடையில், விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மற்றொரு படகும் கடும் கடல் சீற்றத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
Advertisement
அந்தப் படகில் இருந்த மூன்று மீனவர்கள் சக மீனவர்களின் உதவியால் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனால், மேலும் இரு மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கடலோரப் பாதுகாப்புப் படை, கடலோரக் காவல் துறை மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து மாயமான நான்கு பேரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கடலில் தொடர்ந்து நிலவும் கடும் அலைச்சலும் மோசமான வானிலையும் மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு படகு விபத்துகள், திருவனந்தபுரம் கடலோர மீனவக் கிராமங்களில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.