திராணி இல்லாமல் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் ஆயுதமா? - மு.க.ஸ்டாலினுக்கு நிர்மல் குமார் கேள்வி
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழக அரசியலில் மிசா கால கொடுமைகள் குறித்த விவாதமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே, விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தியதாக குற்றம்சாட்டி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், தன்னைப் பற்றியும், தங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமான முறையில் பேசுவதற்கு கட்சியினரை மேடையேற்றுவது திமுகவின் கடைசி ஆயுதமா என மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம் என்ற பெயரில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த நிகழ்வு தமிழக மக்களையும், குறிப்பாக பெண்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவை நோக்கி ஊழல், துரோகம் மற்றும் பொய்கள் தொடர்பாக கேள்விகள் எழும்போதெல்லாம் வன்முறை அல்லது ஆபாசப் பேச்சை அந்தக் கட்சி ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.