சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழக அரசியலில் மிசா கால கொடுமைகள் குறித்த விவாதமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே, விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தியதாக குற்றம்சாட்டி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், தன்னைப் பற்றியும், தங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமான முறையில் பேசுவதற்கு கட்சியினரை மேடையேற்றுவது திமுகவின் கடைசி ஆயுதமா என மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம் என்ற பெயரில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த நிகழ்வு தமிழக மக்களையும், குறிப்பாக பெண்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவை நோக்கி ஊழல், துரோகம் மற்றும் பொய்கள் தொடர்பாக கேள்விகள் எழும்போதெல்லாம் வன்முறை அல்லது ஆபாசப் பேச்சை அந்தக் கட்சி ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். கட்சியினரின் தரமற்ற பேச்சுகளை அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் காட்ட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவால் அரசியலில் இருந்து விலகியிருந்த மக்கள், தற்போது விஜய் மூலம் மீண்டும் அரசியலில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகவும், அரசியலில் நடைபெறும் ஒவ்வொரு செயல்பாடும் மக்களால் கண்காணிக்கப்படுகிறது என்பதை மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளை முன்னிலைப்படுத்தும் தவெகவை எதிர்கொள்ள முடியாமல் திமுகவினர் தெருக்களில் இறங்கி அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவற்றை தாங்கள் எப்போதும் நேர்மையான முறையில் எதிர்கொள்வோம் என்றும் நிர்மல் குமார் கூறியுள்ளார். மேலும், திமுக திருந்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், தமிழக அரசியலில் அக்கட்சியின் எதிர்காலம் குறித்து மக்கள் விரைவில் முடிவு எழுதுவார்கள் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீய சக்தியாக திமுகவை குறிப்பிட்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கூறிய கருத்தை மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாகவும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.