திருக்குறள் ஒவ்வொரு நாளும் பயன்படும் உயர்ந்த வாழ்க்கை நூல் - வைரமுத்து பதிவு
சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 50 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் மாநாடு நேற்று நடைபெற்றது. சைதன்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் நேரிலும், இணையவழியிலும் கலந்து கொண்டு திருக்குறளை ஒப்புவித்தனர். இந்த நிகழ்வு லண்டன் உலகச் சாதனைப் புத்தகத்தில் (World Book of Records London) இடம்பிடித்ததாக வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருக்குறளை மாணவர்கள் வெறும் பள்ளிப் பாடமாக பார்க்காமல், அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாக கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பெரும் செல்வங்களில் ஒன்றாக திருக்குறள் விளங்குகிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பரிசாக வழங்கியதை அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தில் பெற்றோர் கடுமையாக பேசும் சூழல் ஏற்பட்டால், இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை திருக்குறள் மூலம் எடுத்துச் சொல்லலாம் என்றும், சக மாணவர் ஒருவர் பொருளை எடுத்துச் சென்றாலும் மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள குறள்கள் உதவும் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.