பெரியார் மற்றும் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது ஏன் என தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவர் பிறந்த ஈரோடு மண்ணில் திராவிடர் கழகம் சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேரணிக்கும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
மேலும், பெரியாரையும் அண்ணாவையும் தங்களின் கொள்கைத் தலைவர்கள் எனக் கூறும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா அல்லது வேறு தரப்பின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பெரியார் மற்றும் அண்ணாவை புறக்கணிப்பதாகக் கூறி முதலமைச்சரை விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், மக்களின் கவனத்தில் அவரது செயல்பாடுகள் இருப்பதை உணர்ந்து, இந்த பேரணிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.