திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சத்தியபாமா போட்டியிடுகிறார். தனக்காக கட்சித் தலைவர் விஜய் விரைவில் தாராபுரம் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர் சத்தியபாமா. பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர், தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தியபாமா, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை வழங்கிய கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்தார். தாராபுரம் தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து தனக்கு நன்கு தெரியும் என்றும், மக்கள் தன் மீது தொடர்ந்து நம்பிக்கையும் பாசமும் வைத்திருப்பதாகவும் கூறினார். வரும் இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினைகள், கட்சித் தலைமையின் முடிவுகள் மற்றும் தி.மு.க. கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே அக்கட்சியில் இருந்து வெளியேறியதாக சத்தியபாமா தெரிவித்தார்.
Advertisement
மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாகவும், தனது கட்சி மாற்றத்தில் எந்தவித குதிரை பேரமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், எதிர்க்கட்சிகள் தன்னைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருவதாகவும், தி.மு.க. கூட்டணியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாகவும் சத்தியபாமா தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அக்கட்சித் தலைமையின் தன்னிச்சையான முடிவுகளால் நிர்வாகத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் அவர் விமர்சித்தார். அதேநேரத்தில், தமிழக வெற்றி கழகத் தலைமை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்த சத்தியபாமா, தற்போது தமிழக வெற்றி கழகத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பின் காரணமாக இந்த முறை அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் விரைவில் தாராபுரத்திற்கு வந்து தனக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக சத்தியபாமா தெரிவித்தார்.