தவெக ஆட்சி குறித்து தான் விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரக் குழு பட்டியல் வெளியிடப்பட்டபோது, அதில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “போனால் போகட்டும் போடா” என்ற வரிகளை பதிவிட்டிருந்தார். இந்த பதிவு, அவர் கட்சியில் இருந்து விலகப் போகிறாரா என்ற பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தன்னைப் பற்றி சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்சியை விட்டு விலகுவது தொடர்பான வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
எளிமை, மென்மை, உண்மை ஆகியவற்றின் அடையாளமாக விஜய்யை குறிப்பிட்டுள்ள அவர், இளைஞர்களின் ஆதரவும் பெண்களின் பேராதரவும் பெற்ற தலைவராக விஜய் விளங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், தவெக ஆட்சி குறித்து தான் விமர்சனம் செய்ததாக சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், அதில் சிறிதளவும் உண்மை இல்லை என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மாறாக, தவெக ஆட்சியின் சிறப்புகளைப் பற்றி தான் தினமும் பதிவிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து கட்சித் தலைமையும், தனது மனசாட்சியும் அறியும் என்றும் நாஞ்சில் சம்பத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.