தமிழகத்தில் உற்சாகமாக தொடங்கிய 18-வது ஈஷா கிராமோத்சவப் போட்டிகள்
சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் நடத்தி வரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 18-வது ஈஷா கிராமோத்சவத்தின் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள், ஆகஸ்ட் 1, 2026 அன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமான சூழலில் தொடங்கின. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு தொடங்கி வைத்தார்.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய பிரமுகர்கள் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். உடுமலைப்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, பூந்தமல்லியில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். ஹரீஷ், மதுரை கோச்சடையில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கபாண்டி, ஆற்காட்டில் ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. தாஹிரா, ஓமலூரில் ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். மணி, முசிறியில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. விக்னேஷ் மற்றும் திருத்தணியில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சுபம் திமான், ஐ.பி.எஸ். ஆகியோர் வீரர்களை வாழ்த்தி போட்டிகளைத் தொடங்கிவைத்தனர். இதனுடன் பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.இந்த கிராமோத்சவத்தில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்), பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்படுகின்றன. 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.தமிழ்நாட்டில் 70-க்கும் அதிகமான மையங்களில் கிளஸ்டர் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி போட்டிகள் நடைபெற்றன. மீதமுள்ள 30-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.வாலிபால் பிரிவில் 2,400 அணிகளைச் சேர்ந்த 24,000 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 மையங்களில் 620 அணிகளைச் சேர்ந்த 6,200 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 45 அணிகள் விளையாட உள்ள நிலையில், இந்த முதற்கட்ட சுற்றில் மட்டும் சுமார் 30 ஆயிரம் கிராமப்புற வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கிளஸ்டர் சுற்றைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தின் 3 மற்றும் 4-வது வார இறுதிகளில் மண்டல (டிவிஷனல்) போட்டிகள் நடைபெறவுள்ளன.
கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப்போட்டி என மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த விளையாட்டுத் தொடரின் இறுதிப்போட்டி, செப்டம்பர் 6-ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெற உள்ளது.இறுதிப்போட்டியில் வாலிபால் மற்றும் த்ரோபால் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.5 லட்சம், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சம், மூன்றாம் இடத்திற்கு ரூ.1 லட்சம் மற்றும் நான்காம் இடத்திற்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். மேலும் கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் சுற்றுகளிலும் ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் அணிகளுக்கு தனிப்பட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மொத்தமாக ரூ.1 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.கடந்த ஆண்டு வரை தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெற்ற இந்த விளையாட்டுத் திருவிழா, இந்த ஆண்டு வட இந்திய மாநிலங்களுக்கும் விரிவடைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த ஆண்டு நடைபெறும் ஈஷா கிராமோத்சவத்தில் சுமார் 7,000 அணிகளைச் சேர்ந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 15 ஆயிரம் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த வீரர்கள் தங்களது விளையாட்டு திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை, விவசாயத்தின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இளைஞர்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதையும், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு விளையாட்டு வாய்ப்புகள் குறைவதையும் கருத்தில் கொண்டு, கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் விளையாட்டை ஒரு முக்கிய அங்கமாக மாற்ற வேண்டும் என்ற சத்குருவின் நோக்கத்துடன் ஈஷா கிராமோத்சவம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.