தமிழகத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு; இல்லத்தரசிகள் கலக்கம்
தமிழகத்தில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர செலவினத்தை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அரிசி, சமையல் எண்ணெய், பூண்டு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.சமையலில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மிளகாய் வற்றலின் விலையும் சமீபத்திய வாரங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.220-க்கு விற்பனையான மிளகாய் வற்றல், தற்போது தரத்தைப் பொறுத்து ரூ.270 முதல் ரூ.300-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் குழம்புத்தூள் தயாரிக்க பயன்படும் தனியா, கிலோ ரூ.150-ல் இருந்து ரூ.220 ஆக உயர்ந்துள்ளது.மளிகைப் பொருட்களில் பூண்டின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட பூண்டு, தற்போது ரூ.280 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறுகிய காலத்திலேயே விலை இருமடங்காக உயர்ந்திருப்பது நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களின் விலையும் உயர்ந்து வருகிறது. லிட்டர் ரூ.150-க்கு விற்பனையான பாமாயில் தற்போது ரூ.185 ஆக அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில் இனிப்புகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படும் வெல்லத்தின் விலையும் இருமடங்காகியுள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெல்லம், தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முந்திரி பருப்பு கிலோ ரூ.700-ல் இருந்து ரூ.950 ஆகவும், பாதாம் பருப்பு ரூ.250-ல் இருந்து ரூ.1,200 ஆகவும் உயர்ந்துள்ளது.இதற்கிடையில், மற்ற இனிப்புப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரையின் விலை மட்டும் குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளிச்சந்தையில் கிலோ ரூ.70 வரை சென்ற சர்க்கரையின் விலை தற்போது கிலோ ரூ.15.55 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களின் அன்றாட உணவில் முக்கிய இடம் பெறும் அரிசியின் விலையும் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது.