தமிழகத்தில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர செலவினத்தை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அரிசி, சமையல் எண்ணெய், பூண்டு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.சமையலில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மிளகாய் வற்றலின் விலையும் சமீபத்திய வாரங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.220-க்கு விற்பனையான மிளகாய் வற்றல், தற்போது தரத்தைப் பொறுத்து ரூ.270 முதல் ரூ.300-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் குழம்புத்தூள் தயாரிக்க பயன்படும் தனியா, கிலோ ரூ.150-ல் இருந்து ரூ.220 ஆக உயர்ந்துள்ளது.மளிகைப் பொருட்களில் பூண்டின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட பூண்டு, தற்போது ரூ.280 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறுகிய காலத்திலேயே விலை இருமடங்காக உயர்ந்திருப்பது நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களின் விலையும் உயர்ந்து வருகிறது. லிட்டர் ரூ.150-க்கு விற்பனையான பாமாயில் தற்போது ரூ.185 ஆக அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில் இனிப்புகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படும் வெல்லத்தின் விலையும் இருமடங்காகியுள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெல்லம், தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முந்திரி பருப்பு கிலோ ரூ.700-ல் இருந்து ரூ.950 ஆகவும், பாதாம் பருப்பு ரூ.250-ல் இருந்து ரூ.1,200 ஆகவும் உயர்ந்துள்ளது.இதற்கிடையில், மற்ற இனிப்புப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரையின் விலை மட்டும் குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளிச்சந்தையில் கிலோ ரூ.70 வரை சென்ற சர்க்கரையின் விலை தற்போது கிலோ ரூ.15.55 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களின் அன்றாட உணவில் முக்கிய இடம் பெறும் அரிசியின் விலையும் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக மொத்த விற்பனை சந்தையில் 26 கிலோ எடை கொண்ட சாப்பாட்டு அரிசி மூட்டையின் விலை, ரகத்தைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.500 வரை உயர்ந்துள்ளது. ரூ.1,000-க்கு விற்பனையான அரிசி மூட்டை தற்போது ரூ.1,500 ஆகவும், ரூ.1,500-க்கு விற்கப்பட்ட உயர்தர அரிசி மூட்டை ரூ.2,000 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழகத்துக்கான நெல் வரத்து குறைந்திருப்பதே அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் அரிசி வருவதாகவும், அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், புதிய அரிசி வரத்து தொடங்கிய பிறகே விலை குறையும் என்றும் அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.மளிகைப் பொருட்களுடன் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட், பீன்ஸ் உள்ளிட்டவற்றின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வதால் குடும்பங்களின் மாதாந்திர செலவு அதிகரித்து, பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தேவையான அளவுக்கு பொருட்களை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.வரவிருக்கும் பண்டிகை காலத்தில் விலை உயர்வின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.