தமிழகத்தில் மீண்டும் பால், தயிர் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
இந்தியா முழுவதும் பால் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துடன், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி குறைந்து வருகிறது.பால் உற்பத்தி சரிவால், சந்தையில் பால் கொள்முதலை தக்கவைத்துக்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் விலையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.இந்த சூழலில், தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆரோக்யா நிறுவனத்தைத் தொடர்ந்து அமிர்தா, வேதா, சன், ராஜ், சக்ரா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த ஆண்டில் 2-வது முறையாக பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பால் உற்பத்தி குறைவு, கொள்முதல் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், பால் முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் மற்றும் ஊக்கத்தொகையை அதிகரிக்க தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.எரிபொருள் செலவு, கடை வாடகை, ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பால் முகவர்களுக்கு சதவீத அடிப்படையில் கமிஷன் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் பால் விலை மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை உயர்ந்துள்ளதால், குறைந்த விலையில் கிடைக்கும் ஆவின் பாலை மக்கள் அதிகளவில் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.