சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: முதல்-அமைச்சரின் ஆட்சி தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 15-ம் தேதியும், அதற்கு மறுநாள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலிலும் அடுத்தடுத்து இரட்டைக் கொலைகள் நடைபெற்றிருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். காளையார்கோவில் கொலை வழக்கில் ஆள் மாறி கொலை செய்துவிட்டதாக கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களை ஏவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை தாமதிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது என வலியுறுத்தி காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக காவல்துறை தடியடி நடத்தியிருப்பதாகவும், இதனை கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இரட்டைக் கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி நீதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.