சேலத்தில் களை கட்டிய வண்டி வேடிக்கை... கடவுள் வேடத்தில் வந்த பக்தர்களால் பரவசம்
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்றம், அலகு குத்துதல், சக்தி அழைப்பு, பொங்கல் வைத்தல் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் முக்கிய நிகழ்வான வண்டி வேடிக்கை நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.இதையொட்டி வண்ணமயமான மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் பல்வேறு கடவுள் மற்றும் புராண கதாபாத்திரங்களின் வேடங்களை அணிந்து ஊர்வலமாக வந்தனர்.செவ்வாய்பேட்டை வைஸ்ய நண்பர்கள் குழு சார்பில், கேரள மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை உருவான வரலாற்றை விளக்கும் வகையில் அலங்கார வண்டி அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஆதி சங்கரர், மூகாம்பிகை, சொர்ணாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி, பராசக்தி, முனிவர் மற்றும் அரக்கன் போன்ற வேடங்களை பக்தர்கள் தத்ரூபமாக அணிந்து ஊர்வலமாக வந்தனர். இந்த காட்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.மற்றொரு வண்டியில் அமர்நாத் பனிலிங்கத்தை மையமாகக் கொண்டு சிவன், பார்வதி, விநாயகர், சந்திரன் உள்ளிட்ட வேடங்கள் இடம்பெற்றிருந்தன. அப்புசெட்டி தெரு நண்பர்கள் குழு சார்பில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் வேடங்களை அணிந்த பக்தர்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.புராணங்களில் இடம்பெறும் பல்வேறு கடவுள் கதாபாத்திரங்களைப் போல வேடமிட்டு வந்த பக்தர்கள், அதற்கேற்ற பாடல்களுக்கு நடனமாடியபடி சென்றனர். மதுரை வீரன், எல்லையைக் காக்கும் கருப்பசாமி உள்ளிட்ட வேடங்களிலும் பக்தர்கள் பங்கேற்று உற்சாகமாக ஆடினர்.மற்றொரு அலங்கார வண்டியில், கைலாய மலையை தூக்க முயன்று தோல்வியடைந்த ராவணனின் வரலாறு நாடகமாக அரங்கேற்றப்பட்டது.