சென்னை மெட்ரோ ரெயிலில் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் டிக்கெட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக மெட்ரோ ரெயில் உள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் இதில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் வழியாக டிக்கெட் பெறுகின்றனர். பயணிகள் வீட்டிலிருந்தே மெட்ரோ டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வகையில் பல்வேறு வசதிகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. வாட்ஸ்அப், QR குறியீடு, மெட்ரோ இணையதளம் மற்றும் One N C டி உள்ளிட்ட வழிகளில் பயணச்சீட்டுகளை பெற முடியும். இதன் மூலம் நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை பயணிகள் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செல்போன் உள்ளிட்ட ஆன்லைன் வழிகளில் டிக்கெட் பெறும் சேவை தற்போது செயல்படவில்லை.
Advertisement
இதனால் ஆன்லைன் டிக்கெட்டை நம்பி பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொபைல் செயலி மூலம் பெறப்படும் டிக்கெட்டுகள் உள்ளிட்ட ஆன்லைன் QR டிக்கெட் சேவை தற்காலிகமாக கிடைக்காது எனத் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.