சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி; பரபரப்பு
சென்னை தலைமைச் செயலகத்தின் நான்காவது நுழைவு வாயில் அருகே மூன்று பெண்கள் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், தனது இரு மகள்களுடன் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார். ஆனால், புகாரை சமர்ப்பிக்கும் முன்பே அவர்கள் மூவரும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்த அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலின்படி, திருச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் அவரது இரு மகள்களை, வீட்டை உடனடியாக காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், இதை முதலமைச்சரின் தனிப்பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.