சென்னையில் ரூ.34.45 கோடியில் 36 புதிய பூங்காக்கள்! 11 இடங்களில் விளையாட்டுத் திடல்கள் – ரூ.9.52 கோடி ஒதுக்கீடு
சென்னையில் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதன்படி, முதற்கட்டமாக ரூ.34.45 கோடி செலவில் 36 புதிய பூங்காக்களும், ரூ.9.52 கோடி மதிப்பீட்டில் 11 புதிய விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (CMIUDM) 2026-2031 அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடை வசதி, திடக்கழிவு மேலாண்மை, சாலை மற்றும் போக்குவரத்து மேம்பாடு, நகர்ப்புற பசுமையாக்கம், நீர்நிலைகள் சீரமைப்பு, சமூக உள்கட்டமைப்பு, டிஜிட்டல் ஆளுகை, பொது சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடி செலவில் பசுமைப் பகுதிகள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திறந்தவெளிகளை மேம்படுத்தும் பணிகள் 2026 முதல் 2031 வரை மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் முதல்கட்டமாக 36 இடங்களில் ரூ.34.45 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. பூங்காக்கள் அமையவுள்ள இடங்கள்: ஆலந்தூர் மண்டலத்தில் கத்திப்பாரா – விமான நிலைய நுழைவுப் பகுதி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும் பகுதி ஆகிய இடங்களிலும், மணலி மண்டலத்தில் செந்தூர் குமரன் நகர், எலந்தனூர், பெரியார் நகர், வடபெரும்பாக்கம் அன்பு வளர்மதி நகர் ஆகிய பகுதிகளிலும் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2பி பாலத்தின் கீழ் உள்ள மணலி சாலைப் பகுதியிலும், அம்பத்தூர் மண்டலத்தில் சி.டி.எச். சாலை, குமரன் நகர், பார்க் சாலை, ஜீவன் பீமா நகரின் 5, 41, 11 மற்றும் 4-வது பிளாக்குகளுக்கு அருகில், குருசாமி தெரு, முகப்பேர் தொழிற்பேட்டை ஆகிய இடங்களிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.