சென்னையில் ரூ.34.45 கோடியில் 36 புதிய பூங்காக்கள்! 11 இடங்களில் விளையாட்டுத் திடல்கள் – ரூ.9.52 கோடி ஒதுக்கீடு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னையில் ரூ.34.45 கோடியில் 36 புதிய பூங்காக்கள்! 11 இடங்களில் விளையாட்டுத் திடல்கள் – ரூ.9.52 கோடி ஒதுக்கீடு

சென்னையில் ரூ.34.45 கோடியில் 36 புதிய பூங்காக்கள்! 11 இடங்களில் விளையாட்டுத் திடல்கள் – ரூ.9.52 கோடி ஒதுக்கீடு

சென்னையில் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதன்படி, முதற்கட்டமாக ரூ.34.45 கோடி செலவில் 36 புதிய பூங்காக்களும், ரூ.9.52 கோடி மதிப்பீட்டில் 11 புதிய விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (CMIUDM) 2026-2031 அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடை வசதி, திடக்கழிவு மேலாண்மை, சாலை மற்றும் போக்குவரத்து மேம்பாடு, நகர்ப்புற பசுமையாக்கம், நீர்நிலைகள் சீரமைப்பு, சமூக உள்கட்டமைப்பு, டிஜிட்டல் ஆளுகை, பொது சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடி செலவில் பசுமைப் பகுதிகள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திறந்தவெளிகளை மேம்படுத்தும் பணிகள் 2026 முதல் 2031 வரை மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் முதல்கட்டமாக 36 இடங்களில் ரூ.34.45 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. பூங்காக்கள் அமையவுள்ள இடங்கள்: ஆலந்தூர் மண்டலத்தில் கத்திப்பாரா – விமான நிலைய நுழைவுப் பகுதி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும் பகுதி ஆகிய இடங்களிலும், மணலி மண்டலத்தில் செந்தூர் குமரன் நகர், எலந்தனூர், பெரியார் நகர், வடபெரும்பாக்கம் அன்பு வளர்மதி நகர் ஆகிய பகுதிகளிலும் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2பி பாலத்தின் கீழ் உள்ள மணலி சாலைப் பகுதியிலும், அம்பத்தூர் மண்டலத்தில் சி.டி.எச். சாலை, குமரன் நகர், பார்க் சாலை, ஜீவன் பீமா நகரின் 5, 41, 11 மற்றும் 4-வது பிளாக்குகளுக்கு அருகில், குருசாமி தெரு, முகப்பேர் தொழிற்பேட்டை ஆகிய இடங்களிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அண்ணாநகர் மண்டலத்தில் ஈ.வி.ஆர். சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை ஆகிய பகுதிகளும், தேனாம்பேட்டை மண்டலத்தில் பீட்டர்ஸ் சாலையும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. கோடம்பாக்கம் மண்டலத்தின் நெற்குன்றம் கிராமப் பகுதி, பெருங்குடி மண்டலத்தின் விஜிபி 7-வது குறுக்குத் தெரு, சாரதி நகர் 2-வது தெரு, பாலாஜி நகர் 19-வது தெரு ஆகிய இடங்களிலும் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கிழக்கு கடற்கரை சாலை, குமரன்குடில் 3-வது குறுக்குத் தெரு, கண்ணகி நகரின் 3, 4-வது தெருக்கள் மற்றும் பிரதான சாலை, 22, 54, 46, 38-வது குறுக்குத் தெருக்கள், ஆதித்யாராம் நகர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 37-வது குறுக்குத் தெரு, ஜவஹர் நகர் பிரதான சாலை, 10-வது பிரதான சாலை, 39-வது குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளிலும் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. 11 இடங்களில் புதிய விளையாட்டுத் திடல்கள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 11 இடங்களில் ரூ.9.52 கோடி செலவில் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் மாதவரம் மண்டலத்தில் அமிர்தம்மாள் நகர், அசோகா தெரு ஆகிய இடங்களும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் சர்மா நகர் 9-வது தெரு, டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி, ஈ.எச். சாலை, மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆர்.வி.நகர் 69-வது தெருவிலும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் சி.எல்.ஆர்.ஐ. நகர் 1-வது பிரதான சாலை, டி.என்.எச்.பி. ஏ சாலை, பி6 சாலை, சி12 சாலை ஆகிய இடங்களிலும் விளையாட்டுத் திடல்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த 36 பூங்காக்கள் மற்றும் 11 விளையாட்டுத் திடல்களை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒப்பந்த நடைமுறைகள் நிறைவடைந்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.