ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. காங்கோவில் கடந்த மே மாதத்தின் மத்தியில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு, தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விரிவடைந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர். அந்நாட்டின் மொத்தம் 26 மாகாணங்களில் 8 மாகாணங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை மையங்களுக்கு வெளியேயும் பலர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் காங்கோவுக்கான பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. தற்போதைய தொற்று பரவலுக்கு 'பண்டிபக்யோ' (Bundibugyo) வைரஸ் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தோ, தடுப்பூசியோ இதுவரை கிடைக்கவில்லை. இதனால், காங்கோவில் மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். காங்கோவைத் தொடர்ந்து கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், நைஜீரியாவிலும் முதன்முறையாக பண்டிபக்யோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உகாண்டாவில் இருந்து நைஜீரியாவுக்குச் சென்ற பெண் ஒருவருக்கு கடந்த 7-ம் தேதி நோய் அறிகுறிகள் தென்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 17-ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் காங்கோ, கென்யா, உகாண்டாவைத் தொடர்ந்து நைஜீரியாவிலும் வைரஸ் பரவியுள்ளது. இதற்கு முன்பு 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலா தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது சுமார் 28,600 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்தப் பரவலுக்குப் பிறகு தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பாதிப்பு மற்றொரு மிகக் கொடிய பரவலாகக் கருதப்படுகிறது. உலகின் மிக ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா, உடலின் உள் உறுப்புகளில் கடுமையான ரத்தக்கசிவு, உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கும் வழிவகுக்கக்கூடும். காங்கோவின் அண்டை நாடான தெற்கு சூடான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. கிழக்கு காங்கோவில் தொடர்ந்து வேகமெடுத்து வரும் இந்தப் பரவல், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைக் கடந்து நைஜீரியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்குத் தொற்று பரவியிருப்பது சர்வதேச அளவில் கவலையை அதிகரித்துள்ளது. இதனால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இந்தச் சூழல் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.