சென்னையில் நீடிக்கும் ஆவின் பால் தட்டுப்பாடு: மக்கள் அவதி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னையிலும் கடந்த ஒரு மாதமாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, கடைகளுக்கு விநியோகிக்கப்படும் ஆவின் பால் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக முகவர்கள் கூறுகின்றனர். முன்பு ஒரு கடைக்கு 32 பெட்டிகள் வரை வழங்கப்பட்ட நிலையில், தற்போது 20 பெட்டிகள் மட்டுமே வழங்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதனால் பல கடைகளில் காலை நேரத்திலேயே ஆவின் பால் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், சமீப காலமாக ஆவின் பாலின் தரமும் குறைந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்கும் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆவின் பாலை தொடர்ந்து பயன்படுத்தி வரும் குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி தேநீர் கடை நடத்துபவர்களும் இந்த தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் பால் கிடைக்காததால், தனியார் நிறுவனங்களின் பாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பாலை கொள்முதல் செய்வதால், விவசாயிகள் அந்த நிறுவனங்களுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதாகவும், இதன் காரணமாக ஆவினுக்கான பால் கொள்முதல் அளவு குறைந்து தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி, அதிக அளவில் பால் கொள்முதல் செய்வதுடன், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.