சின்னமனூரில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்
சின்னமனூரில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்
சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடியதால் பொதுமக்கள் அவதி — சிறுவர்கள் வெளியே செல்ல அச்சம்; விபத்து, நோய் பரவும் அபாயம்
சின்னமனூர், தேனி மாவட்டம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால், சந்தை புதுத்தெரு பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சந்தை புதுத்தெருவில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே, மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி, தொடர்ந்து தெருவில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
நோய் பரவும் அபாயம்
கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உள்ளிட்ட நோய் பரப்பும் பூச்சிகள் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது முக்கியமான சாலையாக இருப்பதால், கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் ஓடுவதால்வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது.
சாலையின் நிலை சரியாக தெரியாத நிலையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது சறுக்கி விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.