சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நெய்யிலேயே அப்பம், அரவணை தயாரிக்க தேவஸ்தானம் முடிவு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தயாரிக்கப்படும் அப்பம், அரவணை உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இனி பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நெய்யையே பயன்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அப்பம் மற்றும் அரவணை பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை தயாரிக்க அதிகளவு நெய் பயன்படுத்தப்படுவதால், முன்பெல்லாம் பக்தர்கள் சமர்ப்பித்த நெய் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதுடன், தேவையான சமயங்களில் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் நெய் வாங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், தனியார் நிறுவனம் வழங்கிய நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கேரள அரசின் பால்வள மேம்பாட்டு கழகமான மில்மாவிடம் இருந்து நெய் கொள்முதல் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது.ஆனால், மில்மா மூலம் வழங்கப்பட்ட நெய்யிலும் தரக்குறைவு இருந்ததுடன், ரூ.85 லட்சம் அளவிலான மோசடி நடைபெற்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மில்மா அதிகாரிகள் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பரபரப்பான சூழலில், திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் தலைமை அலுவலகத்தில் வாரியக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு தேவஸ்தானத் தலைவர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபரிமலைக்கு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், இனி சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நெய்யையே அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நெய் கொள்முதல் தொடர்பாக மில்மாவுடன் செய்யப்பட்டிருந்த அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.