கோவிலுக்கு வந்த சேகர்பாபு வாகனம் தடுத்து நிறுத்தம்... திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி, குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபுவின் வாகனம், மலை அடிவாரத்தில் போலீசாரால் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், சுவாமி தரிசனம் செய்தும் வருகின்றனர். இதன் காரணமாக கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இந்த சூழலில், குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்த சேகர்பாபுவின் கார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் மலை அடிவாரத்திலேயே நிறுத்தப்பட்டது. தனது வாகனத்திற்கு கார் பாஸ் இருப்பதையும், தாம் சட்டமன்ற உறுப்பினர் என்பதையும் குறிப்பிட்டு மேலே செல்ல அனுமதி வழங்குமாறு அவர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கு பதிலளித்த போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அனுமதி கிடைத்த பின்னரே வாகனத்தை மேலே அனுப்ப முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சேகர்பாபுவுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரத்தில், கார் பாஸ் வைத்திருந்த பிற வாகனங்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், சேகர்பாபுவின் வாகனம் மட்டும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் அறங்காவலர்கள் விளக்கம் அளித்த பின்னரும் உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக மலை அடிவாரத்தில் காத்திருந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. சாய் பிரணீத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து சேகர்பாபுவின் வாகனம் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.