கோழிக்கோட்டில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றதாக 3 பெண் ஆசிரியைகள் கைது
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், வடகரா அருகே பேராம்பிரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பணியாற்றும் 2 பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து கோழிக்கோடு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்புக்காக கேரளா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஆபரேஷன் துபான்’ திட்டத்தின் கீழ் பேராம்பிரா போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சந்தேகத்திற்குரிய ஆசிரியைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இந்த கண்காணிப்பில், கோழிக்கோடு அருகே மருதோம்கரா பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்ற ஆசிரியை, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த கும்பலுக்காக இடைத்தரகராக செயல்பட்டு, பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விநியோகித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து கீர்த்தனாவை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, வங்கி கணக்குகள் மூலம் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரித்தபோது, அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் காவியா என்பவருக்கும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.மேலும், இந்த விற்பனை மற்றும் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக குற்றோத்து பகுதியைச் சேர்ந்த நிஷ்மா (30) என்ற மற்றொரு ஆசிரியையையும் போலீசார் கைது செய்தனர்.நிஷ்மா நேரடியாக போதைப்பொருளை வாடிக்கையாளர்களிடம் வழங்காமல், பணம் பெற்ற பிறகு ஆன்லைன் மூலம் இருப்பிடத்தை அனுப்பி, அந்த இடத்தில் இருந்து போதைப்பொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் இதுவரை 3 பெண் ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் சில ஆசிரியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அந்த கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டிய ஆசிரியர்களே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் கோழிக்கோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.