தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் (நவம்பர் 5) நிறைவடைகிறது. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் காலியாக உள்ள 6,574 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இருப்பினும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்களும் அதிக ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி குரூப்-4 தேர்வுக்கு மொத்தம் 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 5-ம் தேதி வியாழக்கிழமை கடைசி நாளாகும். எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக நாளை நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். குரூப்-4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெறவுள்ளது.