ரூ.19.20 கோடியில் நவீன பட்டுக்கூடு அங்காடி வளாகம்... தருமபுரியில் முதல்-அமைச்சர் விஜய் திறப்பு
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ.19 கோடியே 20 லட்சம் செலவில் இந்தப் புதிய பட்டுக்கூடு அங்காடி வளாகம் கட்டப்பட்டுள்ளது. பட்டுக்கூடுகளின் விற்பனை மற்றும் கொள்முதல் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய பட்டுக்கூடு விற்பனை மையங்களில் ஒன்றாக தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடி விளங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அங்காடியில், ஆண்டுதோறும் சராசரியாக 600 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 15 முதல் 20 மாவட்டங்களைச் சேர்ந்த பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். பட்டுக்கூடுகளின் வரத்தை அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் பட்டு நூற்பாளர்களுக்குத் தேவையான அளவு பட்டுக்கூடுகள் கிடைப்பதை உறுதி செய்யவும், விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தவும் இந்த ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பட்டுக்கூடு விற்பனைக்கான தனிக் கட்டடம், ஆண் மற்றும் பெண் விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் ஆகியோருக்குத் தனித்தனியாகக் காத்திருப்பு அறைகள், உணவகம், வாகன நிறுத்துமிடம், அணுகுசாலை, மின்சார வசதி, ஆழ்துளைக் கிணறு, குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான இடுபொருட்களை விற்பனை செய்யும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அலுவலர்களுக்கான குடியிருப்புகள், தொழில்நுட்ப சேவை மையம், விவசாயிகள் பயிற்சி மையம் உள்ளிட்ட 9 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.