Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

“சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க வேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

“சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க வேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட்டின் கிளையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கை தமிழக அரசால் கடந்த 1980-ம் ஆண்டிலேயே முன்வைக்கப்பட்டது என்பதையும் தனது கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது பிரிவின்படி, டெல்லி மட்டுமின்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தலைமை நீதிபதி தீர்மானிக்கும் பிற இடங்களிலும் சுப்ரீம் கோர்ட்டை அமைக்க முடியும். மேலும், 1979-ம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டிலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த வழக்காடிகள் நீதியைப் பெறுவதற்காக டெல்லி வரை பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தென்னிந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் சுப்ரீம் கோர்ட்டின் கிளை அமைக்கப்பட்டால், தமிழகம் மட்டுமின்றி தென்மாநிலங்கள் அனைத்தும் பயனடையும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் அனுபவமும் சட்ட அறிவும் மிக்க வழக்கறிஞர்கள் அதிக அளவில் இருப்பதால், சுப்ரீம் கோர்ட்டின் கிளை செயல்படுவதற்குத் தேவையான சட்ட வல்லுநர்கள் இங்கு கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 1862-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ஐகோர்ட்டு, நாட்டின் பழமையான உயர் நீதிமன்றங்களில் ஒன்று என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கிளைக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டமைப்புகளையும் தமிழக அரசு ஏற்படுத்தித் தரத் தயாராக இருப்பதாக ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 07.08.2007 அன்று நடைபெற்ற சுப்ரீம் கோர்ட்டின் முழு அமர்வு, இந்த விவகாரத்தில் தனது முந்தைய முடிவுகளை மாற்றுவதற்கு உரிய காரணங்கள் இல்லை எனத் தெரிவித்திருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

Advertisement
இதன் அடிப்படையில்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவும் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என்பது டெல்லிக்கு அருகில் வசிப்பவர்களுக்கும், வழக்கு மற்றும் பயணச் செலவுகளைச் சமாளிக்கக்கூடியவர்களுக்கும் மட்டுமே எளிதானதாக உள்ளது. குறிப்பாக, டெல்லிக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான நீண்ட தொலைவு காரணமாக தென்மாநில மக்களுக்கு நீதியை அணுகுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வி.வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த நீதிப்பேராணை (சிவில்) எண் 36/2016 வழக்கில், 13.07.2016 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் கிளை அமர்வுகளை அமைப்பது உள்ளிட்ட சட்டக் கேள்விகளை ஆராய அரசியலமைப்பு அமர்வு அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும், சென்னையில் சுப்ரீம் கோர்ட்டின் கிளையை அமைப்பதற்கு ஆதரவாக பல்வேறு காரணங்களையும் முதல்-அமைச்சர் முன்வைத்துள்ளார். அதன்படி, சென்னையில் கிளை அமைப்பது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் என்றும், 2004, 2006, 2008 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் இதுதொடர்பாக பரிந்துரைகளை வழங்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், சுப்ரீம் கோர்ட்டுக்கு நிரந்தர மண்டலக் கிளைகள் அமைக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையங்களின் அறிக்கைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கிளைகளின் நிர்வாக அதிகாரம் முழுமையாக இந்திய தலைமை நீதிபதியிடமே இருக்கும் என்பதால், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் விளக்கியுள்ளார். எனவே, சென்னையின் முக்கியத்துவம், தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கை மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து சென்னையில் கிளை அமர்வு அமைக்க சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு