கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பெரியார் அறிவுலகம்' எனப் பெயரிட்டார். பணிகள் முழுமையடையாத காரணத்தால் அப்போது திறப்பு விழா நடைபெறவில்லை. பின்னர் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதலமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தைத் திறந்து வைத்தார். கோவையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரமாண்ட நூலகத்திற்குப் பெரியார் பெயர் சூட்டியதற்காக, திராவிடர் கழகம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு அவர் சென்றார். அங்கு நூலகத்தைப் பார்வையிட வந்திருந்த பள்ளி மாணவர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடன் இணைந்து அறிவுலகத்தின் பல்வேறு பகுதிகளை மு.க.ஸ்டாலின் சுற்றிப் பார்த்தார்.
Advertisement
அங்குள்ள அறிவியல் மையம், குழந்தைகளுக்கான நூலகம், வாசிப்புப் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், நூலகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், திராவிடம், திராவிட இயக்கம், தந்தை பெரியார் மற்றும் அவரது கொள்கைகள் குறித்து அறிந்துகொள்ள விரும்புவோர் பெரியார் அறிவுலகத்திற்கு வருகை தர வேண்டும் என்றார். குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இங்கு வந்து தங்களது அறிவையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், திராவிட மாடல் அரசின் கனவுத் திட்டமான பெரியார் அறிவுலகத்தைத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடன் இணைந்து பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஒருமுறை வருகை தந்து அனைத்து பகுதிகளையும் விரிவாகப் பார்வையிட உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, நெல்லையில் காயிதே மில்லத் நூலகம், திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார். அந்த நூலகங்களையும் எதிர்காலத்தில் திறக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.