குத்துச்சண்டையில் இந்தியா அசத்தல்: மேலும் 6 பேர் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கம் உறுதி
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியின் 7-வது நாளில் நடைபெற்ற கால்இறுதி சுற்றுகளில் மேலும் 6 இந்தியர்கள் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் முன்னேறியதுடன், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தையும் உறுதி செய்தனர்.பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற கால்இறுதியில் இந்தியாவின் சாக்ஷி சவுத்ரி, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த கேத்லின் பிரையர்ஸை எதிர்கொண்டார். தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சாக்ஷி, 5-0 என்ற ஒருமித்த கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.பெண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி, நியூசிலாந்தின் மோர்கன் ஹென்டர்சனை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் முன்னேறினார்.ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சச்சின் சிவாச், போட்ஸ்வானாவைச் சேர்ந்த டிரெஷர் மோரெமியை எதிர்கொண்டார். சச்சின் தொடுத்த தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறிய மோரெமிக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு அவர் போட்டியைத் தொடர்ந்தாலும், 5-0 என்ற கணக்கில் சச்சின் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.80 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற கால்இறுதியில் இந்திய வீரர் அங்குஷ் பன்ஹால், செசல்ஸின் ஜேட் மைகாக்கை எதிர்கொண்டார். முழு ஆதிக்கத்துடன் விளையாடிய அங்குஷ், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.90 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்தியாவின் நரேந்தர் பெர்வால், சமோவாவின் மைக்கேல் செகோவை எதிர்கொண்டார். கடுமையான போட்டிக்குப் பிறகு அனுபவத்தை வெளிப்படுத்திய நரேந்தர், 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குத் தகுதி பெற்றார்.பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியா, இங்கிலாந்தின் எலிஸ் கிளைனை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரைஇறுதி சுற்றை எட்டினார்.இதன் மூலம் காமன்வெல்த் குத்துச்சண்டைப் போட்டியில் இதுவரை இந்தியாவின் 10 வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே லவ்லினா, பிரீத்தி பவார், பிரியா கங்ஹாஸ் மற்றும் ஜதுமணி ஆகியோரும் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.