குஜராத்தில் வீட்டின் குளியலறையில் சிக்கிய 7 அடி முதலை; வனத்துறை மீட்பு
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த நிலையில், வீட்டின் குளியலறைக்குள் நுழைந்த 7 அடி நீள முதலை ஒன்றை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு இயற்கை குளத்தில் விடுவித்தனர்.
ஆனந்த் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகளில் வாழும் முதலைகள் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் நள்ளிரவில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்து பதுங்கியிருந்தது. அதிகாலையில் குளியலறைக்குச் சென்ற குடும்பத்தினர் முதலையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து வெளியேறி, உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர், சிறப்பு உபகரணங்கள் மற்றும் கயிறுகளின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி முதலையை பாதுகாப்பாக பிடித்தனர்.மீட்கப்பட்ட முதலையின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டதில் எந்தக் காயமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர், வனத்துறையினர் அதனை அருகிலுள்ள பாதுகாப்பான இயற்கை குளத்தில் விடுவித்தனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பருவமழைக் காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.