காமன்வெல்த் 2026: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து; ஊக்கத்தொகையும் அறிவிப்பு
காமன்வெல்த் 2026 விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கப் பட்டியல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றியை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் விஜய், இரு வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபு வெண்கலப் பதக்கமும் வென்றிருப்பது பெருமைக்குரிய சாதனை என பாராட்டியுள்ளார்.மேலும், தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகையாக வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.ஒரே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பதால், இது மாநிலத்தின் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வீரர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு அவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கூறிய முதல்-அமைச்சர் விஜய், சர்வதேச அளவில் மேலும் பல சாதனைகளைப் படைக்க இருவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.