காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவின் முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மைசூர் அருகே அமைந்துள்ள கபினி அணைக்கு நேற்று வரை சீரான அளவில் நீர் வந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது விநாடிக்கு 15,500 கனஅடி அளவுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. அணை வேகமாக நிரம்பி வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக எந்த நேரத்திலும் விநாடிக்கு 8,000 முதல் 10,000 கனஅடி வரை உபரி நீர் ஆற்றில் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
அதேபோல், மண்டியா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்த அணைக்கு விநாடிக்கு 10,504 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால், அவை விரைவாக தங்களது கொள்ளளவை நோக்கி நிரம்பி வருகின்றன. கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதும், அவற்றில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.