சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர் உதயசங்கர், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டார்.உதயசங்கர் சீனாவில் செயல்பட்டு வரும் கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த மரியாவும் வேலை செய்து வந்துள்ளார். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால் இருவருக்கும் இடையே முதலில் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணத்தை நடத்த இருவரது குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உதயசங்கரும் மரியாவும் பாரம்பரிய உடைகளில் கோவிலுக்கு வந்தனர்.
Advertisement
மரியா பட்டுப்புடவையும், உதயசங்கர் பட்டு வேட்டி மற்றும் சட்டையும் அணிந்திருந்தனர்.கோவிலில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, கெட்டிமேள இசையுடன் உதயசங்கர் மரியாவுக்கு தாலி கட்டினார். திருமணத்துக்குப் பிறகு மரியா தனது பெயரை கீர்த்தனா என மாற்றிக்கொண்டார்.வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இருவரின் காதல், தமிழர் பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் சாட்சியாக திருமணத்தில் இணைந்துள்ளது. இந்த திருமணத்திற்கு இணையவாசிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.