திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி, ஆயக்குடி, கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி, தாளையூத்து, தொப்பம்பட்டி மற்றும் சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மல்பெரி சாகுபடியை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் சீதோஷ்ண நிலை மாற்றங்களால் இந்தத் தொழில் பாதிக்கப்பட்டிருந்தாலும், விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், பழனி வட்டாரத்தில் தரமற்ற முட்டைகள் மற்றும் வீரியம் குறைந்த இளம்புழுக்கள் பயன்படுத்தப்பட்டதால் பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தரமில்லாத புழுக்களால் கூடுகள் முழுமையாக உருவாகாததால் உற்பத்தி கணிசமாக குறைந்து, அதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியில், தரமற்ற முட்டைகளால் கூடு கட்டாத பட்டுப்புழுக்களை ஒரு விவசாயி தனது தோட்டத்தில் இருந்து அகற்றி குப்பையில் கொட்டியுள்ளார்.
Advertisement
இதேபோல், பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பலரும் கூடு கட்டாத பட்டுப்புழுக்களை குப்பையில் கொட்டுவதோடு, சிலர் அவற்றை தீ வைத்து எரித்தும் வருகின்றனர்.கடுமையான வெயில் நிலவினாலும், உற்பத்தி பாதிப்புக்கான முக்கிய காரணம் தரமற்ற இளம்புழுக்கள் மற்றும் முட்டைகளே என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மத்திய மற்றும் மாநில பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் இந்தப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்து, பட்டுப்புழு வளர்ப்புக்கான தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும், காப்பீட்டு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.