உதயநிதி ஸ்டாலின் கைது: ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்காக தற்போது தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்.இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்யும் நடவடிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமை என்றும், கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் உயர்ந்த பண்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது ஜனநாயக நடைமுறைகளுக்கு பொருந்தாதது என்றும், இதுபோன்ற அணுகுமுறை காலனித்துவ ஆட்சிக் கால அடக்குமுறைகளை நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியினரும் முதலமைச்சரும் தங்களது அரசியல் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் நிலையில், அதே உரிமை எதிர்க்கட்சியினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த உரிமையை கட்டுப்படுத்தும் வகையிலான கைது நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இதுவரை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்த உடனேயே கைது நடவடிக்கை எடுக்கப்படுவது சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள முக்கியமான சூழலில், பொதுக்கூட்டத்தில் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட்டு, கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயக மரபுகளையும் மதிக்க வேண்டும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் தனது அறிக்கையில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.