ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த பதற்றத்தின் ஒரு பகுதியாக, ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததுடன், அந்த வழியாகச் சென்ற சரக்கு கப்பல்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.தற்போது இந்த மோதல் 9-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ஈரானில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்க தரப்பில் 17 வீரர்கள் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மேலும் பதற்றமடைந்துள்ளது.இந்த சூழ்நிலையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களால் இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், தற்போது ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விரைவில் அங்கிருந்து வெளியேறுமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.