அறிந்துகொள்வோம்: சிவாலயங்களில் நடைபெறும் ஆறு கால பூஜைகள் என்னென்ன?
இந்து கோவில்களில் வழிபாட்டு முறைகள் அந்தந்த பகுதி மற்றும் கோவில் மரபுகளுக்கு ஏற்ப மாறுபடும். பக்தர்களின் வழக்கத்தையும் விருப்பத்தையும் பொறுத்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. தென் மாநில கோவில்களில் நித்திய பூஜை, நிமித்த பூஜை, திருவிழாக்கால பூஜை என பல வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆகம விதிகளின்படி அமைந்த பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தினமும் ஆறு வேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில், சிறிய கோவில்களில் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது தினசரி பூஜை நடத்தப்படுகிறது. அந்த வகையில், சைவ கோவில்களில் ஆகம முறைப்படி நடைபெறும் ஆறு கால பூஜைகள் குறித்து பார்க்கலாம். 1. உஷத் கால பூஜை ஆறு கால பூஜைகளில் முதலாவது பூஜை சூரிய உதயத்திற்கு முன்பாக நடைபெறும். ஆகம விதிப்படி, சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய உதயம் வரையிலான நேரத்தில் இந்த பூஜை நடத்தப்பட வேண்டும். பொதுவாக அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் இதற்குரியது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். இந்த நேரத்தில் சிவாச்சாரியார், பைரவர் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ள கோவில் சாவியை பூஜை செய்து எடுத்துக்கொள்வார். பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க பள்ளியறைக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் ஓதப்படும். தொடர்ந்து உற்சவர் சிலை மட்டும் மேளதாளங்களுடன் கோவிலை வலம் வந்து, மூலவரான சிவலிங்கத்தின் முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். உற்சவர் வடிவில் இருந்த இறைவன் மீண்டும் லிங்க வடிவிலான மூலவரிடம் சென்றடைவதாக நம்பப்படுகிறது. அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் இந்த பூஜை நிறைவடைகிறது. 2. காலசந்தி பூஜை சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள், அதாவது காலை 6 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் காலசந்தி பூஜை நடைபெற வேண்டும் என ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கோவில்களில் பொதுவாக காலை 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த பூஜை நடத்தப்படுகிறது. முதலில் சூரியன், விநாயகர் மற்றும் துவாரபாலகர்களுக்கு பூஜை நடைபெறும். அதன் பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்யப்படுகிறது. பஞ்சக்ருத்யம் கூறப்பட்டு, நித்ய பலி வழங்கிய பிறகு காலசந்தி பூஜை நிறைவடைகிறது. 3. உச்சிகால பூஜை நண்பகலில் நடைபெறும் பூஜை உச்சிகால பூஜையாகும். சூரியன் உச்சத்தில் இருக்கும் நேரமான மதியம் 11.30 மணி முதல் 12.30 மணி வரையிலான காலத்தில் இது நடைபெறும். விநாயகர் மற்றும் துவாரபாலகர்களுக்கு பூஜை செய்த பின்னர், மூலவரான சிவலிங்கத்திற்கு அலங்காரம், தூபம், தீபம் மற்றும் நைவேத்தியம் ஆகியவை செய்யப்படும்.