இந்து கோவில்களில் வழிபாட்டு முறைகள் அந்தந்த பகுதி மற்றும் கோவில் மரபுகளுக்கு ஏற்ப மாறுபடும். பக்தர்களின் வழக்கத்தையும் விருப்பத்தையும் பொறுத்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. தென் மாநில கோவில்களில் நித்திய பூஜை, நிமித்த பூஜை, திருவிழாக்கால பூஜை என பல வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆகம விதிகளின்படி அமைந்த பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தினமும் ஆறு வேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில், சிறிய கோவில்களில் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது தினசரி பூஜை நடத்தப்படுகிறது. அந்த வகையில், சைவ கோவில்களில் ஆகம முறைப்படி நடைபெறும் ஆறு கால பூஜைகள் குறித்து பார்க்கலாம். 1. உஷத் கால பூஜை ஆறு கால பூஜைகளில் முதலாவது பூஜை சூரிய உதயத்திற்கு முன்பாக நடைபெறும். ஆகம விதிப்படி, சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய உதயம் வரையிலான நேரத்தில் இந்த பூஜை நடத்தப்பட வேண்டும். பொதுவாக அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் இதற்குரியது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். இந்த நேரத்தில் சிவாச்சாரியார், பைரவர் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ள கோவில் சாவியை பூஜை செய்து எடுத்துக்கொள்வார். பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க பள்ளியறைக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் ஓதப்படும். தொடர்ந்து உற்சவர் சிலை மட்டும் மேளதாளங்களுடன் கோவிலை வலம் வந்து, மூலவரான சிவலிங்கத்தின் முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். உற்சவர் வடிவில் இருந்த இறைவன் மீண்டும் லிங்க வடிவிலான மூலவரிடம் சென்றடைவதாக நம்பப்படுகிறது. அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் இந்த பூஜை நிறைவடைகிறது. 2. காலசந்தி பூஜை சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள், அதாவது காலை 6 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் காலசந்தி பூஜை நடைபெற வேண்டும் என ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கோவில்களில் பொதுவாக காலை 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த பூஜை நடத்தப்படுகிறது. முதலில் சூரியன், விநாயகர் மற்றும் துவாரபாலகர்களுக்கு பூஜை நடைபெறும். அதன் பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்யப்படுகிறது. பஞ்சக்ருத்யம் கூறப்பட்டு, நித்ய பலி வழங்கிய பிறகு காலசந்தி பூஜை நிறைவடைகிறது. 3. உச்சிகால பூஜை நண்பகலில் நடைபெறும் பூஜை உச்சிகால பூஜையாகும். சூரியன் உச்சத்தில் இருக்கும் நேரமான மதியம் 11.30 மணி முதல் 12.30 மணி வரையிலான காலத்தில் இது நடைபெறும். விநாயகர் மற்றும் துவாரபாலகர்களுக்கு பூஜை செய்த பின்னர், மூலவரான சிவலிங்கத்திற்கு அலங்காரம், தூபம், தீபம் மற்றும் நைவேத்தியம் ஆகியவை செய்யப்படும். பூஜையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மூலவரிடமிருந்து அகற்றப்பட்டு, சண்டிகேஸ்வரரிடம் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. 4. சாயங்கால பூஜை சூரிய மறைவுக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பாக தொடங்கி, சூரியன் மறையும் நேரத்திற்குள் சாயங்கால பூஜை நடைபெற வேண்டும். பொதுவாக மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் இதற்குரியது. இந்த பூஜையில் முதலில் விநாயகருக்கு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து மூலவரான சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் தீபம் ஏற்றி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. 5. இரண்டாம் கால பூஜை சாயங்கால பூஜை முடிந்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, இரவு தொடங்கும் நேரத்தில் இந்த பூஜை நடைபெறும். விநாயகர் பூஜையைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, தீபம் மற்றும் நைவேத்தியம் ஆகியவை செய்யப்படுகின்றன. இதன் பின்னர் பரிவார தெய்வங்களுக்கு வழிபாடு, நித்யாக்னி கார்யம் மற்றும் நித்யோத்சவ பலி ஆகியவை நடைபெறும். இறுதியாக சண்டிகேஸ்வரர் பூஜையுடன் இரண்டாம் கால பூஜை நிறைவு பெறுகிறது. 6. அர்த்தசாம பூஜை இறுதி பூஜையான அர்த்தசாம பூஜை இரவு 7.30 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் நடைபெறும். முதலில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்படுகிறது. அதன்பின் உற்சவ மூர்த்திகள் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு நறுமண மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலை மற்றும் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இதனால் இந்த வழிபாடு பள்ளியறை பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. பள்ளியறை பூஜை முடிந்த பிறகு சண்டிகேஸ்வரருக்கு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து பைரவர் சந்நிதியில் கோவில் சாவி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இதனுடன் அன்றைய அர்த்தசாம பூஜை நிறைவடைகிறது. ஆகம விதிகளில் பூஜைகளுக்கான நடைமுறைகள் ஆகம விதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோவில்களில், அந்த விதிமுறைகளுக்கு ஏற்பவே தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. பூஜை நடைபெறும் நேரம், இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம், அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும் மலர்கள், அபிஷேகத்திற்கு தேவையான திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேளை பூஜையின்போதும் கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவர் விக்ரகத்தின் முந்தைய அலங்காரங்கள் அகற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் புதிய வஸ்திரம் அணிவித்து நைவேத்தியம் படைக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். பெரிய ஆலயங்களில் தீபாராதனையின்போது ஷோடசோபசாரங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், பல்வேறு வகையான வாத்தியங்களும் இசைக்கப்படும்.